Powered By Blogger

Saturday, July 11, 2020

கொலைபாதகங்களில் உளவுத்துறையின் பங்கு?
"(Secret) Friends of (Secret) Police"?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையிலும், சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலையிலும் நாமனைவரும் பார்க்கத் தவறிய, விவாதிக்காமல் விட்டுவிட்ட ஓர் அம்சம் இருக்கிறது. அது உளவுத்துறையின் பங்கு.

தூத்துக்குடியில் மகள் ஸ்நோலின் உள்ளிட்ட பல முன்னணிப் போராளிகளை கவனமாகக் கண்காணித்து, அவர்களின் பட்டியலைத் தயாரித்தவர்கள் யார்? இவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றால் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டி, ஸ்நோலின் வாயிலேயே சுட்டுகொல்லப்பட காரணமாக இருந்தவர்கள் யார்?

சாத்தான்குளம் படுகொலையில் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு - புதுச்சேரி' அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இரண்டு விடயங்களை கவனியுங்கள்:

கடந்த 18.6.2020 அன்று இரவு "ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த விடுப்பில் உள்ள சீருடை அணியாத காவலர் ஒருவர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலமாக ஜெயராஜ் தெரிவித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்."

19.6.2020 அன்று இரவு "ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஒரு நபர் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணனை போன் மூலமாக தொடர்பு கொண்டு, நேற்று உங்களை தப்பா பேசிய நபர் தற்சமயம் GG பாக்கியம் டிரேட்டர்ஸ் மரக்கடைக்கு முன்பாக வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கொண்டிருக்கக் கூடிய நபர் தான் என்று ஜெயராஜ் குறித்த அடையாளத்தைக் கூறியுள்ளார்."

இந்த இரண்டு விடயங்களும் முக்கியமானவை.

"விடுப்பில் உள்ள சீருடை அணியாத காவலர்" எனக் குறிப்பிடப்படுபவர் யார்? அவரது பெயர் என்ன? என்ன பதவி வகிக்கிறார்? அவர் உளவுத்துறை அதிகாரியா? இது விசாரிக்கப்பட வேண்டும்.

"ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஒரு நபர்" காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டியத் தேவை என்ன?

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன். சில ஆட்டோ ஓட்டுனர்கள், சில பெட்டிக் கடைக்காரர்கள் உளவுத்துறைக்குத் தொடர்ந்து தகவல் அளிக்கிறார்கள். ஓர் அதிகாரபூர்வமற்ற "(Secret) Friends of (Secret) Police" அமைப்பு இங்கே தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள், சமூக ஆர்வலர்கள், போராளிகள் போன்றவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவதற்கு, இந்த "(Secret) Friends of (Secret) Police" பெரும் உதவிகள் செய்கிறார்கள்.

நீங்கள் ஓர் அமைப்பு நடத்தினால், ஒரு கட்சி நடத்தினால், ஏன் ஒரு வாட்சப் குழு நடத்தினால்கூட, அவற்றுக்குள் "(Secret) Friends of (Secret) Police" ஊடுருவுகிறார்கள். தகவல் கொடுக்கிறார்கள். கண்காணிக்கிறார்கள். மொத்தத்தில், அங்கிங்கெனாதபடி எங்கும் police informers பரவிக் கிடக்கிறார்கள்.

இந்த நாடு ஒரு 'surveillance state' ஆக, ஒரு 'police raj' ஆக மாறிவிட்டிருக்கிறது. பாசிஸ்டுகள் இன்னும் சில ஆண்டுகள் இங்கே ஆட்சி புரிந்தால், இந்த நிலைமை இன்னும் மோசமாகும். காவல்துறை, உளவுத்துறையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். நீங்களும், நானும் மூச்சுவிடக்கூட முடியாத நிலை வெகுவிரைவில் உருவாகும்.

உளவுத்துறையும் கொலைபாதகங்களுக்கு உதவுகிறதா? உளவுத்துறைக்கும் "(Secret) Friends of (Secret) Police" அமைப்பு இருக்கிறதா என்கிற கேள்விகள் பொதுமக்களால் விவாதிக்கப்பட வேண்டியத் தேவை இருக்கிறது.

(பி.கு.: மேற்படித் துறைகள் மணல் கொள்ளைக்காரர்களை, மலைக் கொள்ளையரை, லஞ்சம் வாங்குகிறவர்களை, ஊழல் செய்கிறவர்களை சமூக விரோதிகளை எல்லாம் இப்படிக் கண்காணிப்பதில்லை.)

இது சனநாயக இந்தியாவா, அல்லது சனம் சாகும் இந்தியாவா?


நாகர்கோவில்,
யூலை 11, 2020.

No comments:

Post a Comment