Powered By Blogger

Monday, October 18, 2021

 ஹிட்லர் பேச்சு

சுப. உதயகுமாரன்

அக்டோபர் 12, 2021

வன்முறைப் பேச்சும், கருத்துரிமை வரம்பு மீறலும் பொதுவாழ்வில் பிரபலமாகும் உத்திகளாகக் கையாளப்படுகின்றன. அண்மையில் இது மிகவும் அதிகரித்து வருகிறது. அரசியல் கலாச்சாரம் அசிங்கமாக மட்டுமல்ல, ஆபத்தானதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் நிலைமை மோசமாகும்.

ஹிட்லரின் மேடைப்பேச்சுப் பாணியை தமிழ்நாட்டில் நாதக-வினர் சிரத்தையுடன் பின்பற்றுகின்றனர். ஹிட்லர் தனது மேடைப் பேச்சுக்களை இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினார்: 1]கேட்டுக் கொண்டிருப்போரை உற்சாகப்படுத்தி, உணர்ச்சிவயப்படுத்த; 2]தனது அரசியல் எதிரிகளை மிரட்ட, அச்சுறுத்த!

ஹிட்லர் மேடையில் நிற்கும் விதம், தன்னை முன்னிறுத்தும் முறை, உடல் மொழி போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தினார். தனது உரைவீச்சை சக்திமிக்கதாக மாற்ற நடிப்பு பயிற்சியும் பெற்றார். தனது கைகளை உயர்த்தி, தாழ்த்தி, நீட்டி, மடக்கி, எல்லாத் திசைகளிலும் உதறி, முஷ்டியால் குத்திப் பேசினார்.

ஹிட்லர் பேசும்போது, அவரது முகம் ஒரு நாடக மேடையாகவே மாறும். கோபத்தை, வெறுப்பை, எரிச்சலை, வன்மத்தை, வன்முறையை, ஆக்ரோசத்தை அது கொப்பளிக்கும். ஹிட்லரின் கண்களும், உதடுகளும், வாயும் முழுவீச்சில் இயங்கும். அந்த நாடகத்தைப் பார்க்காமல் நீங்கள் திரும்பியிருக்க முடியாது.

ஹிட்லர் பேசும்போது அவருடைய குரல் கடுமையாக, தீவிரத்தன்மையுடன் ஒலிக்கும். சொற்களை தனித்தனியாக உச்சரித்து, ஏற்ற இறக்கங்களுடன் கத்தியேப் பேசுவார். ஜெர்மன் மொழியில் தேவைப்படாத இடங்களிலும், தவறான இடங்களிலும்கூட முறையின்றி குரலை உயர்த்திக் கத்துவார். மூச்சுவிடாமல் சரளமாகப் பேசுவார்.

சற்றொப்ப இரண்டு கோடி மனிதர்களைக் கொன்று குவித்த கொடூரன், கொலைகாரப்பாவி ஹிட்லரை சில அற்ப பிறவிகள் நேசத்துடனும், பாசத்துடனும் பார்த்தனர், புகழ்ந்தனர், புளகாங்கிதம் அடைந்தனர். அவர்களில் சிலர்: ஆர்.எஸ்.எஸ்., கோல்வால்கர், சாவர்க்கர், பால் தாக்கரே உள்ளிட்டோர்.

தமிழ்நாட்டில் ஹிட்லரை விதந்தோதி, அண்மை "தமிழரா, திராவிடரா" கருத்தரங்க உரையில், 2020 மாவீரர் நாள் உரையில், திருச்சி மாநாட்டு உரையில் என ஏராளமான முறை ஹிட்லரின் "மேன்மையான" சிந்தனைகளை மேற்கோள் காட்டி, தம் ஆதரவாளர்களை அவர் வழி நடக்கக் கேட்டுக்கொள்ளும் ஒரே அரசியல்வாதி சீமான் மட்டுமே.